Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

வாலைக் கும்மி
பதிப்பு இர. குமரவேல்

vAlaik kummi (author not known)
edited by ira. kumaravEl
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
    The e-text has been generated using Google OCR and subsequent editing and proof-reading.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2020.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    https://www.projectmadurai.org/

வாலைக் கும்மி
பதிப்பு இர. குமரவேல்

Source:
வாலைக்கும்மி
பதிப்பாளர் : இர. குமரவேல்
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்லைக்கழகம், சென்னை - 600 005.
ஜூலை 2007

சுவடியியலும் பதிப்பியலும் பட்டயப் பேற்றிற்காக
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெறும் பதிப்பேடு
எண்: 53010623
-----------

வாலைக்கும்மி

நெறியாளர் சான்றிதழ்
வீ. அரசு, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.

"வாலைக்கும்மி" எனும் தலைப்பிலான ஓலைச்சுடிவயைச் 'சுவடியியலும் பதிப்பியலும்' எனும் பட்டயப் பேற்றிற்காக இர.குமரவேல் அவர்கள் என் மேற்பார்வையில் பதிப்பித்தார் என்றும் இப்பதிப்பு இவர்தம் தனி முயற்சியில் உருவானது என்றும் சான்றளிக்கிறேன்.
        நெறியாளர்,
        (வீ. அரசு )
நாள் : 31-07-2007 இடம் : சென்னை - 5.
-----------

பதிப்பாளர் உறுதிமொழி
இர. குமரவேல்
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.

'வாலைக்கும்மி' என்னும் பட்டயப் பேற்றிற்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெறும் பதிப்பேடு என் சொந்த முயற்சியில் உருவானது என்று உறுதியளிக்கிறேன்.

நாள் : 31-07-2007         பதிப்பாளர்,
இடம் : சென்னை - 5.         இர.குமரவேல்
----------

நன்றியுரை

நான் இப்பட்டய படிப்பை மேற்கொள்வதற்கு களமாக அமைந்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும், தமிழ் இலக்கியத்துறைக்கும் அதன் தலைவரும் என் நெறியாளருமான வீ.அரசு அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பதிப்புக்குத் தேவையான நூல்களை வழங்கிய சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசினர் கீழ்திசை நூலகம் மற்றும் ஆராய்ச்சி துறையுமான மைய நூலகத்திற்கும் சுவடிகளை பாதுகாத்து வரும் அதன் ஊழியர்களும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பதிப்பை மேற்கொள்ளும் காலகட்டத்தில் என்னோடு இருந்து எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவராஜ் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை உயர்த்திக் கொண்டிருக்கும் எனது. குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

        இர. குமரவேல்
-----------

உள்ளடக்கம்
    1 நன்றியுரை
    2. பதிப்புரை
    3. நூல் - வாலைக்கும்மி
    4. பாடல் முதற்குறிப்பு அகராதி
    5. துணைநூற்பட்டியல்
-------------

பதிப்புரை

முன்னுரை

சைகை மொழியும் ஒலி வடிவமும் இணைந்து எழுந்து வடிவத்துக்கு மாறியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். பெருமுயற்சியின் விளைவாக எழுத்து முறையினை மக்கள் தங்கள் கருத்தினை பிறருக்கு தெரிவிக்க வேண்டி எழுதி வைக்கத் தொடங்கிய காலம். அவர்கள் எழுத்துச் சாதனங்களாக பயன் படுத்தியவைகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள் பனை ஓலைகள் மரப்பட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தினர். இவற்றில் பனையோலைகளில் எழுதியது ஓலைச்சுவடி என்றும் இன்றளவும் பெருமளவில் நடைமுறையில் இருந்து வருவதும் இதன் சிறப்பை நன்குணர்த்தும்.

இத்தகைய சுவடிகளை பதிப்பித்ததன் காரணமாகவே உ. வே. சா. இன்றளவும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழ்கின்றார். இவரை தமிழ்மக்கள் ''தமிழ்தாத்தா" என்று கூறுமளவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்து சுவடிகளே என்றால் அது மிகையாகாது. சுவடிப்பதிப்பில் முன்னோடியாக உ.வே.சா. தாமோதரம்பிள்ளை போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்களின் சுவடிப் பதிப்பு பணி இன்றளவும் நினைத்து பெருமைபடக்கூடியது.

கும்பிப்பாடல்கள்

கைகளைக் கொட்டி ஆடவதனைக் கும்மி என்றும் குழுமி என்ற சொல்லிருந்து கும்மி என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். மேலும் கும்மாளம் என்ற சொல்லுக்கு குதித்தாடுதல் என்ற பொருளும் கும்மாளமிட்டு ஆடுவதனைக் கும்மி எனவும் குறிப்பிடுகின்றனர்.

கும்மியைப் பற்றி நூல்கள்

அகநானூறு கும்மியைப் "கொப்பி" என்றும்
சீவகசிந்தாமனியில் கும்மியைக் கொம்மை என்றும்
கும்மி என்ற சொல்லாட்சி மற்ற நூல்களில் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

அறிஞர்களின் கூற்றில் கும்மி

சு. சண்முகசுந்தரம் எனும் அறிஞர் கைகளைக் கொட்டி, பெண்கள் ஆடும் ஆட்டமே கும்மி என்ற பொருள்படும் என்கிறார்.

சோமலைவின் கருத்துப்படி கும்மி நடனத்துக்கு ஏற்றவாறு கைகொட்டியும் பாட்டுப்பாடியும் நடனமாடுவது கொம்மாய் என்றும் இச்சொல்லிலிருந்து கும்மி என்ற சொல் ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்.

கி. வா. ஜகந்நாதன் கும்மியை நன்னன்னா, கொட்டுதல் எனக் குறிபிடுகின்றார்.

ஆறு இராமநாதன் அவர்கள் கும்மியை தட்டியாங்கொட்டுதல், கொண்டான் கொட்டுதல் எனச் சுட்டிக்காட்டுகிறார்.

வாலைக் கும்மி

இவர்களின் கருத்துக்களை நோக்க கும்மியின் வேறு பெயர்களாக கொப்பி, கொம்மை, கொம்மாய், கொம்மி, நன்னனாகொட்டுதல், தட்டியாங்கொட்டுதல், கொண்டான் கொட்டுதல் என அறிய முடிகின்றது.

வாலைக் கும்மியின் சிறப்புகள்

ஆசிரியர் பெயர் தெரியவில்லை இந்நூலினை குன்றக்குடி மடம் வெளியிட்டுள்ளது என நூலின் தொடக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலையாமையை அடிப்படையாகக் கொண்டும் பெண்ணின் சிறப்பை உலகறியச் செய்வதற்கும் தர்மம் செய்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தியும் அதன் மூலம் இறைவனை அடைதலையும் கூறுகின்றார்.

வாலைக் கும்மியில் நிலையாமைக் கருத்துகள்

உறுதியற்ற வாழ்வினை தெரிவிக்க வாலைக் கும்மியில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பக்கபலமாய் நிற்பது சிந்தித்தற்குரியது.

    ஊத்தைச் சடிலமென்று எண்ணாதே இது
    உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே - 23

துர்நாற்றம் வீசும் உடலைக் கொண்டிருக்கும் மனிதனை உப்பிட்ட பாண்டமென்றே
குறிப்பிடுகின்றார்.

    "ஒன்பது வாசல் கோட்டை யுண்டு அதில்
    உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம்”

என்றும் மனித உடலை துளையுள்ள பாண்டம் என்கின்றார்.

    யுத்தக்கா லன்வந்து தான் பிடித்தால் நாமும்
    செத்த சவமடிவா லைப்பெண்ணே.

உயிர் குடிக்கும் எமன் நம்மை தீண்டிவிட்டால் நாம் பிணமாகத்தான் கருதப்படுகிறோம் என்பதை நன்குணர்த்துகிறார்.

வாலைக் கும்மியில் பெண்கள் பெறும் இடம்

வாலைக்கும்மியானது பெண்ணின் உயர்வுக்கே பெரும்பாடுபட்டுப் பேசுகின்றது. பெரும்பாலான பாடல்கள் 'வாலைப்பெண்ணே ' 'கும்மியடிங்கடி' என்ற சொற்களைக் கொண்டே முடிகின்றது.

'சரஸ்வதி துதி கொண்டே வாலைக் கும்மி ஆரம்பமாகிறது. இது பெண்ணை முதன்மையாக வைத்துத் தொடங்கப்பட்டுள்ளது. பெண்ணின் உயர்வு கருதியே தான் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்ணுக்கு அறிவுரை கூறும் நோக்கிலும் அமைந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

    கற்புள்ள மாதர் குலம்வாழ் கநிரை
    கற்பை பழித்தவ ரேதாழ்க" 45

கற்பை பழித்தவர் தாழ்நிலையை அடைவது உறுதி என்றும் கூறுகின்றனர்.

மனிதனின் வாழ்க்கையில் பெண்ணின் பங்கு எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிக அழகாக

    மாதவாய் வந்து அமுதம் தந்தாள்
    மனையாட்டி யாய்வந்து சுகங்கொடுத்தால்
    ஆதரவாகியதங் கையா னால் நமக்கு
    ஆசைக் கொழுந்தியும் மாமியானாள் - 64

மேலும்,
    பெண்ணுமில் லாமலே ஆணுமில் லை இது
    பேணிப் பாரடிவா லைப்பெண்ணே. -71

பெண்தான் ஆணுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குபவள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்

    கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலை
    கொடுத்த தாயும் நிசமாமே -79

என்ற பாடலின் மூலம் தாயின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறாள்.

இவ்வாறு பெண்களுக்கு உயர்வு தரும் விதமாக தமது பாடல்களில் பெண்களை பதிவு செய்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். பெண் விடுதலைக்காக போராடும் மக்களுக்கான முன்னாடியாக வர்லைக் கும்மியின் ஆசிரியரைக் குறிப்பிடலாம்.

தருமம் செய்தல்

அனைவரும் பிறர்க்கு உதவுதலை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். மனைவி என்பவள் வீடுவரைக்கும் உறவு என்றும், பிள்ளை மயானக் காடு வரைக்கும் வருவார்கள் என்றும் நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் இறுதிவரை உடன் வந்து சொர்கத்தை அளிக்கும்.

    பெண்டாட்டி மந்தை மட்டும் வருவாள்
    பெற்பிள் ளைமயாவிக் கனா மட்டும்
    தெண்டாட் டுதருமம் நடுவிலே வந்து
    பரகதி தான் கொடுக் குமப்பா - 81

என்கின்றார்.

நாம் செய்யும் தான தருமங்களை உடனே செய்ய வேண்டும் என்பதனை,

    சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்சம்
    திருப்பணி கள் முடிக்க வேண்டும் - 82

மேலும், நாளை என்று சொல்ல லாகாதே என்று

    நான்மறை வேதம் முழங்குதடி - 85

எனவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

வாலைக்கும்மியில் இடம்பெறும் தெய்வங்கள்

    அண்ணாமலைத்தீபம் உன்னுக்குள்ளே - 111
    திருக்கடையூரும் மூர்த்தலிங்கேசரும் - 112
    சிதம்பரத்தாண்டவம் உன்னுக்குள்ளே - 113
    வடமலையில் வாழும் வெங்கடேசனுக்கு - 115

இவ்வகையானத் தெய்வங்கள் வாலைக் கும்மியில் இடம்பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

யாப்பமைதிகள்

யாப்பமைதிகள் இடம்பெறும் பாடல்களும், ஓரிரு பாடல்களில் சீர்கள், குறைந்தும், மிகுந்தும் வருகின்ற பாடல்களும்,
பாடல் எண்கள்: 8, 15, 17, 24, 28, 34, 38, 39, 40, 41, 47, 48, 55, 60, 61, 64, 65, 66, 67, 69, 80, 83, 99, 101, 104, 106, 107, 113.

வாலைக்கும்மியில் இடம்பெற்றுள்ளன என்பதை இந்தப் பகுதியில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

எழுத்துச் சிக்கல்கள்

நல்விஐய – ஐஞ்செழுத்தாம் - 11
ஐஞ்சொல்லை - 15 ஐந்துஎழுத்துக்குள்ளே - 17
இந்த வகையான எழுத்துக்கள் பாடலுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டுள்ளது.

வாலைப்பயன்

வாலைக்கும்மியை படிப்போருக்கு ஏற்படும் நன்மைகளாக,

    ஆயசு கொடுப்பாள் நீரழிவுமுதல்
    கண்டது மற்ற வியாதி எல்லாம்
    பசாசு பறந்திடும் பில்லி வினா வடிவத்தில்
    வாலை பெண் பேரைச் சொன்னால் - 104

மேலும்,

    சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
    காலனை யுந்தானுதைப்பாள்" 108

நீண்ட ஆயுளைத் தருவதும், வியாதி எல்லாம் தீர்ந்து போதலும், எமபயத்தை நீக்குதலும் வாலைக்கும்மியை படிப்பதாலும், பாடுவதால் ஏற்டும் பயன்களாகும் எனலாம்.

முடிவுரை

வாலைக்கும்மியில் இடம்பெற்றுள்ள சொற்களும், சொற்பொருள்களும், அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணமே இடம்பெற்றுள்ளதாலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு உகந்த கருத்துக்களைக் கூறுவதோடு அனைவரும் விரும்பும் பாடலாகவும் வாலைக்கும்மி திகழும் என்றும், படிப்பவர் மனதை எளிதில் பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்றும் கூறலாம்.
---------------

வாலைக் கும்மி

சரஸ்வதி துதி

சித்தர் களேபோற்றி வாலைப்பெண் ணாமந்த
சத்தியின்மேற் கும்மிபாட் டுறைக்க
தத்திமித் தோமென ஆடும் சரஸ்வதி
பத்தினி பொற்பாதம் காப்போமே.

கல்விநிறை வாலை பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின்மேற் கும்மிதன்னை செப்புதற்கு - நல்விஜய
நாதனிருசொல் வேதனஞ்சு போதன மிஞ்சும்
ஆனகஞ்ச பாதம் வஞ்சநெஞ் சினில் வைப்போம் 1

சத்தி சடாதரி வாலைபெண் ணாமந்த
        உத்தமிமேற் கும்மிபாட் டுரைக்க
வித்தைகள் ஒற்றைக்கொம் பாவலை
        சித்தி வினாயகன் காப்போமே. 2

எங்கு நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்நின்று
        நங்கயின் மேற்கும்மி பாடுதற்கு
கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
        பங்கய பொற்பாதம் காப்போமோ. 3

ஞானப்பெண் ணாமருதின் ஜோதிப்பெண் ணாமாதி
        வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப்பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
        மால்மரு கேசனைக் காப்போமே. 4

ஆண்டிப்பெண் ணாம்ராஜ பாண்டிப்பெண் ணாம்வாலை
        அம்பிகை மேற்கும் மிபாடுதற்கு
காண்டிப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
        ஆண்டவன் பொற்பாதம் காப்போமே. 5

அந்திரி சுந்திரி வாலைப்பெண் ணாமந்த
        அம்பிகை மேற்கும்மி பாடுதற்கு
சிந்தையில் முந்தநல்விந் தையாய் வந்திடும்
        நந்தீசர் பொற்பாதம் காப்போமே. 6

தில்லையில் முல்லையில் எல்லையுள் ளாடிய
        வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
சல்லாப கும்மி தமிழும் பாடவரும்
        தொல்லை வினைபோகும் வாலைப் பெண்ணே. 7

மாதா பிதாகூட இல்லாம லேவெளி
        மண்ணும்விண் ணும் உண்டு பண்வேனென்று
பேதைபெண் ணுமுதல் வாலைபெண் ணாம் என்றும்
        பூந்தா ளிந்துபுவி அடக்கமே. 8

வேதமும் பூத முண்டா னதுவும்
        நாதமும் கீதமுண் டானதுவும் வெளி
வெளிஞான சாஸ்திர முண்டான துவும்வழி
        நான் சொல்லக் கேளடிவா லைப்பெண்ணே 9

முந்த ஜெகங்கள்உண் டானது வும்வழி
        தெய்வமும் தேவமுண் டானதுவும்
விந்தையாய் வாலை யுண்டா னதுவும்
        விளக்கம் பாரடிவா லைப் பெண்ணே 10

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
        அரிக்குள் நின்றதும் ஐஞ்செழுத்தாம்
கரிக்கு முந்தின தஞ்செழுத்தாம் வாசி
        பரிக்குள் நின்றதும் ஐஞ்செழுத்தாம் 11

ஆதியில் மஞ்செழுத் தானால் வாலைப்பெண்
        ஐஞ்தெழுத்து மென்று போனாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
        ஞான வகையாவாள் தானானாள் 12

உமையெழுத் தேயுட லாச்சு மற்றும்
        ஓமென் றழெத்தே யுயிராச்சு
ஆமிந்தெ ழுத்தை யறிந்து கொண்டு
        விளையாடி கும்மி யடியுங்கடி 13

செகம்படைத் ததும்மஞ் செழுத்தாம் பின்னும்
        சிவன்படைத் ததும்மஞ் செழுத்தாம்
யுகமுடிந்ததும் மஞ் செழுத்தாம் பின்னும்
        உறுபன மானதும் மஞ்செழுத்தாம் 14

சாஸ்திரம் பார்த்தாலும் ஓம்தானு மென்ன
        வேதம் தானுமே பார்த்திருந் தாலுமென்ன
சூத்திரம் பார்த்தல்லோ ஆக வேனும்
        மைந்துசொல் லைஅறிந்தல் லேகாண வேனும். 15

காணது கிட்டாது எட்டாது வஞ்சில
        காரிய மில்லைஎன் றேநினைத்தால்
காணாதுங் காணலாம் மஞ்செழுத் தால்சில
        காரி முண்டுதியா னம்செய்தால். 16

அயனும் மைந்து எழுத்துக்குள் ளேஅரி
        அயனும் மைந்து எழுத்துக்குள்ளே
ஆயனும் மைந்து எழுத்துக்குள் ளே இந்த
        வாலை யுமைந்து எழுத்துக்குள்ளே. 17

மஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
        மம்பத்தோர் கூரந்தா னாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
        நிசம்தெரி யுமோவாலைப் பெண்ணே. 18

எயக்குது எயக்கிது அஞ்செழுத் துஅதை
        எட்டிப் பிடித்துக்கொள் ரெண்டெழுத்தை
நோக்கிக் கொள்வாசியை மேலாகி வாதி
        நிலையைப் பாரடிவா லைப்பெண்ணே. 19

சிதம்பாச் சக்காந் தானரி வாரிந்த
        சீமையி லுள்ளபெ ரியோர்கள்
சிதம்பாச் சக்கா மென்றா லதற்குள்
        தெய்வத்தை யல்லோ அறியவேணும் 20

மனது றுதியும் இல்லா மல்வழி
        மாறுதல் சொல்லி என்ன செய்வாள்
மனது றுதியும் வைக்கவேணும் பின்னும்
        வாலைக் கிருபையு முண்டாகவே ணும் 21

இனிவெளி யினில்சொல் லாதே எழில்
        தீப்பட்டு திந்தவரி வழிக்கே
கனிமொழிச் சியேவா ருங்கடி கொஞ்சங்
        கருவைச் சொல்வேன் கேளுங்கடி 22

ஊத்தைச் சடிலமென்று எண்ணா தேஇது
        உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கு ஊத்தை இல் லைஇதை
        பார்த்துக்கோ உந்தனுட லுக்குள்ளே 23

உச்சிக்கு நேரே யுண்ணாவுக் குமேல்நிதம்
        வைத்த விளக்கு எரியுதடி
அச்சுள் விளக்கு வாலையடி அவியாமல்
        எரியுது வாலைப் பெண்ணே 24

எரியுது அறுவீட் டில்அதில் எண்ணை
        இல்லை அமிர்தந் தண்ணியுமில்லை
தெரியுது போக வழியுமில்லை பாதை
        சிக்குது சிக்குதுவா லைப்பெண்ணே 25

சிலம்பொலி யென்ன கேழ்குமடி மெத்த
        சிக்குள்ள பாதைது டுக்கமடி
வலம்புரிச் சங்க மூதுமடி மேலே
        வாசியைப் பாரடிவா லைப்பெண்ணே 26

வாசிப் பழக்க மறியவே ணும்மறு
        மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்குண்டு யோகமும் வாசியும்
        நாட்டத்தைப் பாரடிவா லைப்பெண்ணே 27

முச்சுட ரான விளக்குக் குள்ளே
        மூல மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுட ராகி யந்த சுடர்வாலை
        இவள்விட வேறில்லைவா லைப்பெண்ணே 28

சூடாமல் வாலை இருக்கிற தும்பரி
        சுத்த சிவனுக்குள் ளானதுவும்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்மேல்
        வீடு காணலாம்வா லைப்பெண்ணே 29

மேல்வீடு கண்டவள் பாணியடி விண்ணில்
        விளக்கில் நிரைந்தவள் வாணியடி
தாய்வீடு கண்டவள் ஞானி யடிபரி
        காண்டிக் கொண்டவன் பட்டாணியடி 30

அத்தியி லேநாம் பத்தியி லேமனம்
        பத்தியி லேநடு மத்தியிலே
நெத்தியி லேசதா சிவமென்று சொன்னேன்
        தனிமையைப் பாரடிவா லைப்பெண்ணே 31

அழுத்திலே சொல்லஞ் செழுத்திலே நானும்
        வழுத்தினேன் ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயே சபானும் உண்டு
        கண்டு பார்டிவா லைப்பெண்ணே. 32

அஞ்சிலே மஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
        கொஞ்சிவி ளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழி ருப்பான்
        நேருட னாமடிவா லைப்பெண்ணே 33

தொந்தியி லேநடு பந்தியிலே சிந்தை யிலே
        முந்தி உந்தனுடன் நேதியில்
விஷ்ணுவுந் தானிருப் பாரிதை உண்மையாய்
        பாரடி வாலைப் பெண்ணே 34

ஆலத்தி லேஇந்த ஞாலத்தி லேவரும்
        காலத்தி லேஅனுகூ லத்திலே
மூலத்திலே பிரும்மனும் தானிருந்து வாசி
        முடுக்குறான் பிண்டம் பிடிக்கிறான் 35

தேறுண்டு அஞ்சாறு ஆணி யுண்டுஅதில்
        தேவரு முண்டுசங் கீதமுண்டு
ஆறுண்டு பாரடி வாலைத்தெய் வமதில்
        அடக்கம் தானடிவா லைப்பெண்ணே 36

ஒன்பது வாசல் கோட்டை யுண்டு அதில்
        உள்ளே நிலைக்காரர் அஞ்சுபேராம்
அன்புட னேபரிக்கா ரர்கள் ஆறுபேர்
        அடக்கம் தானடிவா லைப்பெண்ணே 37

இந்த விதத்திலே திரேகத்தி லேதெய்வம்
        இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
சந்தோஷ வாலையைப் பாரா மல்மனிதர்
        சாகுர தேதடிவா லைப்பெண்ணே 38

நகார திஷ்டிப்பு ஆன தினால்
        நடுவாளங் கார்நய மாச்சு
உகார முச்சிர சாச்சு இதை
        உற்று பாரடிவா லைப்பெண்ணே 39

வகார மானது ஓசையாச் சுஅந்த
        மகார மானது கெற்பமாச்சு
சிகார மானதுமாய் கையாச்சு இதை
        தெரிந்து பாரடிவா லைப் பெண்ணே 40

ஓமென் று அக்ஷரந் தானுமுண் டுஅதற்கு
        உமையெழுத் துமிருக் குதடி
நாமிந் தெழுத்தை யறிந்து கொண்டோம்
        விளையாடிப் பாரடிவா லைப்பெண்ணே 41

கட்டாத காளையைக் கட்டவே ணும்அதை
        வெட்டவேணும் வாசி யோட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே னும்காயம்
        எண்ணைக் கிருக்குதுவா லைப்பெண்ணே 42

இருந்த மார்கமாய் தானிருந் துவாசி
        ஏர்காம லேதான்காக் கவேணும்
திரிந்து ஓயலைந்து வெந்து திரேகம்
        இறந்து போச்சுதேவா லைப்பெண்ணே 43

பூத்த மலராலே மைஞ்சு முண்டுஅதில்
        பூவில்லாப் பிஞ்சும னேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வு முண்டுமற்ற
        மூன்று பேராலே இழிவுண்டு 44

கற்புள்ள மாதர் குலம்வாழ் கநிரை
        கற்பை பழித்தவ ரேதாழ்க
சிற்பானைப் போற்றி கும்மி யடிகுரு
        தற்பானை போற்றி கும்மியடி 45

அஞ்சியே ரெண்டு அழிந்த தில்லை
        அஞ்சாரி லேநாளு ஒழிந்ததில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ துஅது
        பேணி போடலாம்வா லைப்பெண்ணே 46

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டான்இரு
        காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
இல்லா தேனெடுத் துண்டுவிட் டேன் அது
        இனிக்குதில் லைவாலைப் பெண்ணே. 47

மேலுங் கோட்டைக்கு ஆதரவாய் நன்றாய்
        விளங்கும் கண்ணனூர்பா தையிலே
காலு ருவம்பலம் விட்டதி னால்அதற்கு
        நடையடி வாலைப் பெண்ணே 48

தொண்டையுள் முக்கோணம் கோட்டை யிலேஅதில்
        தொந்திக் கொடிமரநாட் டையிலே
சண்டை செய்துகொண்டு ஓடிப்போ னால்கோட்டை
        வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே 49

ஆசை வலைக்குள் அகப்பட் டதும்வீடு
        அப்பவே வெந்து அழிந் திட்டது
பாச வலைவந் துமுடிட்ட துவாலை
        பாதத்தைப் போற்றடிவா லைப்பெண்ணே 50

அன்ன மிருக்குது மண்ட பத்தில்
        விளையா டித்திரியும் துஆண்புலியும்
இன்ன மிருக்குது கொஞ்சுகிளி சத்தினி
        அதையொட்டி பிடிக்குது மூன்றுகிளி 51

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
        மாப்பிள்ளை மார்வந்து சாப்பிடவும்
ஏய்க்குது இப்படி மஞ்சாறு ஆந்தை
        இருந்து முழிக்குது பாருங்கடி 52

மீனு மிருக்குது ஊரணி யில்அதை
        மேய்த்துத் திரியுங்கள் சாவல்
தேனுமி ருக்குதுபே னாயிலே யுன்னத்தி
        கட்டுதில் லையேவா லைப்பெண்ணே 53

காக மிருக்குது தோப்பி லேதான்
        கவசர்வ லிருக்குது தேம்பிதேதான்
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞ்சனம்
        பார்த்தால் தெரியுமேவா லைப்பெண்ணே 54

கும்பிக் குளத்தி லேஅம் பலமாம்
        குலகுரு ஊரிலே சேறுமேஅந்த
தெம்பு இடையிட்டு பாதை களாய்வந்து
        சேர்ந்தா ராய்துபார்வா லைப்பெண்ணே 55

பண்டுமே அழைக்கின்ற றுக்குள்ளே ரெண்டு
        கொண்டை யிருந்து பகட்டுதடி
கண்டிருந்து மந்த காக்காயும் மஞ்சு
        கழுகு கொன்றது பாருங்கடி. 56

ஆத்தி லேஅஞ் சுமுத லையடி
        புத்திலே ரெண்டு காடியடி
கூற்றனம் மூன்று குருடனடி பாசம்
        கொண்டு பிடிக்குறான்வா லைப்பெண்ணே 57

முட்டை இடும்தே றுபறவை குட்டை
        மோசம் பண்ணு தொருபறவை
வட்ட மிட்டார்ஊர் கன்னியில் ரெண்டு
        மானின் றுதவிக்கு துவாலைப் பெண்ணே 58

அட்டமான வட்டப் பொட்டலிலே ரெண்டு
        அமாலி நிற்குது தேர்மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதிரேகம்
        செந்தணல் ஆகுதேவா லைப்பெண்ணே. 59

முக்கோண வட்டக் கிணற்றுக் குள்ளே
        மூலமண் டலவாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
        அமர்ந்திருக் கிறாள்வா லைப்பெண்ணே 60

இரண்டு காலால் கோபுரமா நெடுநாளா
        இருந்து அழிந்து போகும்
கண்டபோது கோபுர மிருக்கு வாலை
        காணவும் ஒட்டாள் நினைக்கவு மொட்டாள் 61

அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
        ஆறு தாரத்தை யுண்டுபண்ணி
கொஞ்சம் பெண்ணாசை யையுண்டு பண்ணிவாலை
        கூட்டுறாள் காலனை மாட்டுறாள் 62

காலனைக் காலாலு தைத்தவளாம் வாலை
        ஆலகால விஷம்உண் டவளாம்
மாளா செகத்தைப் படைத்தவளா மிந்த
        மானிடன் கோட்டை இடித்தவளாம் 63

மாதவாய் வந்து அமுதம் தந்தாள்
        மனையாட்டி யாய்வந்து சுகங்கொடுத்தால்
ஆதர வாகியதங் கையா னால்நமக்கு
        ஆசைக் கொழுந்தியும் மாமியானாள் 64

சிரித்து மெல்லப் புறமெரித் தாள்வாலை
        செங்காட்டு செட்டியைத் தானுதைத்தாள்
ஒருத்தி தனியாகவே சூரர்தன் னைவென்று
        ஒற்றையாய்க் கஞ்சவனைக் கொன்றுவிட்டாள் 65

இப்படியில் லோ இவள் தொழிலாம் இந்த
        ஈணா மலடிக் கொடுஞ் சூலிமைப்
படுங்கன் னியர்கே ளுங்கடி
        வயது வாலைத் திரிசூலி 66

கத்தி பெரிதோ உரைபெரி தோஇவள்
        கண்ணு பெரிதோ இவள் பெரிதோ
        சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடிவா லைப்பெண்ணே 67

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதில்லை
        அப்படி வாலை பெரிதானாள்
பொன்ணு பெரிதில்லை வெள்ளி பெரிதில்லை
        பொய்யாது சொல்லுரேன் கேளடி 68

மாமிஷ மானாள் எலும்பும் உண்டு
        சதைவாங்கி ஓடு கழன்றுவிடும்
ஆமிஷ மிப்படி சத்தி யென்றே
        விளையாடிக் கும்மியடி யுங்கடி. 69

பண்டு முளைப்பது அரசியே ஆனாலும்
        விண்டுஉமி போனால் விளையாது
கண்டு கொண்டு முன்னவைசொன் னாள்இது
        உண்டோஇல் லையோவா லைப்பெண்ணே. 70

மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
        வாசமில் லாமலேபூ வும்இல்லை
பெண்ணுமில் லாமலே ஆணுமில் லைஇது
        பேணிப் பாரடி வா லைப்பெண்ணே 71

நந்த வனத்திலே ஜோதி யுண்டுநிலம்
        கார்த்தபே ருக்குநெல் லும்உண்டு
விந்தையாய் வாலையைப் பூஜிக்க முன்னாள்
        விட்ட குரைவேணும் வாலைப் பெண்ணே 72

வாலையைப் பூசிக்க சித்த ரானசு
        வாலைக் கொத்தாசை யாய் சினகர்தரானா
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
        இந்தவிதம் தெரியுமோவா லைப்பெண்ணே 73

வாலைக்கு மேலான தெய்வமில்லை மானம்
        காப்பதுசே லைக்குமே லும்இல்லை
பாலுக்கு மேலான பாக்ய மில்லை
        வாலைக் கும்மிக்கும் மிக்கு மேலான பாடலில்லை 74

நாட்டத்தைக் கண்டால் அழியலாகும் அந்த
        நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறுகலா கும்இது
        பொய்யல்ல மெய்யடிவா லைப்பெண்ணே 75

ஆணும் பெண்ணும் கூடியதி னால்பிள்ளை
        ஆச்சுதென்றே நீரும் பேசுகின்றீர்
பெண்ணும் ஆணும் கூடிய தல்லே
        பேதம் மற்றொருவித் தாச்சுவா லைப்பெண்ணே 76

இன்ணைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடு
        என்வாழ்க்கை என்பதும்பொய் யல்லவே
அண்ணைக் கெழுதிய படிமுடியும் வாலை
        ஆத்தாளைப் போற்றடிவா லைப்பெண்ணே 77

வீணாசை கொண்டு திரியா தேஇது
        மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
        காணலா மங்குகாயம் மாளலாம் 78

பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வேறு
        பெற்ற பிள்ளை களாவதும் பொய்யல்லவே
கொண்டாட்ட மானதகப் பன்பொய் யோமுலை
        கொடுத்த தாயும் நிசமாமே. 79

தாயும் பெண்டாட்டியும்தான் சரியே
        தன்மயம் தானே இருவரும் தான்தொடு
காயும் படிமும் சரியாமோ உந்தன்
        கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே 80

பெண்டாட்டி மந்தை மட்டும் வருவாள்
        பெற்றபிள்ளை ளைமயாவிக் கனாமட்டும்
தெண்டாட் டுதருமம் நடுவிலே வந்து
        பரகதி தான் கொடுக் குமப்பா 81

பாக்கிய மும்மகள் போக்கியமும் ராஜ
        யோக்கியமும் வந்து தானகல
சீக்கிரம் தருமம் செய்யவேண்டும் கொஞ்சம்
        திருப்பணி கள்முடிக்க வேண்டும் 82

திருப்பணி கள் முடித்தே ... செத்து
        சாகாத பேராலே என்றும்
அருட்பொலிந் திடும்வே தத்திலே
        அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே 83

மெத்தை தனிலே படுத்திருந்து நாமும்
        மெல்லியரு டன்சிரிக்கும் போது
யுத்தக்கா லன்வந்து தான்பிடித்தால் நாமும்
        செத்த சவமடிவா லைப்பெண்ணே 84

ஏழைப் பனாதிகள் இல்லைஎன் றால்அவர்
        இருந்தால் என்னகொடுக்க வேண்டும்
நாளை என்றுசொல்ல லாகாதே என்று
        நான்மறை வேதம் முழங்குதடி 85

தஞ்சமென் றோரைக் கெடுக்காதே யார்கும்
        வஞ்சனை செய்ய நினையாதே
பஞ்ச பனாதி யடிக்காதே மேலும்
        பாவம் துலைக்க முடியாதே 86

கண்டது கேட்டது சொல்லாதேகண்ணில்
        காணாத உத்திரம் விள்ளாதே
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே
        பெற்றபிள் ளைக்கு இளப் பம் கொடுக்காதே 87

சிவனடி யாரை வேதிய ரைசில
        சிலபுலவர் ஞானப் பெரியோரை
மவுனமா கவும்வை யாதே அவர்
        மனது நோகவும் பொய்யாதே 88

வடிக் கழிவுகள் சொல்லாதே கற்பு
        மங்கையர் மேல்மனம்வை யாதே
படிக்க வாசியைப்பார்த் துக்கொண்டு வாலை
        பாதத்தைப் போற்றடிவா லைப்பெண்ணே 89

கூடிய பொய்கள் சொல்லாதே பொல்லாக்
        குலைக ளவுசெய் யாதே
ஆடிய பாம்பை அடியா தேஇது
        அறிவு தானடிவா லைப்பெண்ணே 90

காரிய னாகிலும் வீரியம் பேசவும்
        காணா தென்றஅவை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யா தேபுளி
        பழம்போல் உதிர்ந்து விடுந்தானே 91

ராஜாக் கள்பகை செய்யா தேநடு
        காட்டுப் புலிமுன் நில்லாதே
சாத்தி ரங்களும் சொல்லாதே மாய்கை
        தேவடியாள் தினம் பண்ணாதே 92

தன்வீ டுஇருக் கஅசல்வீ டுசெல்லாதே
        தாயார் தகப்பனை வையாதே
உன்வீட் டுக்குள்ளே யூக மிருக்கையில்
        ஓடித் திரியுமுய வாலைப் பெண்ணே 93

சாதி பேதம் சொல்லுகிறீர் தெய்வம்
        தானென்று ஓர்உடல் பேதமுண்டா
ஓதிய பாலதி லொன்றா கிஅதில்
        உற்பத்தி நெய் தயிர் மோறாச்சு 94

பாலோடு முண்டு பூனையு முண்டுமே
        காணவும் காண்பதில்லை மேல் அந்த
ஆசையைத் தள்ளிவிட்டு மனதில் வேண்டிய
        பூசையைச் செய்தி டுங்கள் 95

கோழிக்கு ஆறுகால் என்று சொன்னேன்
        கூளிக்கு மூன்றுகா லென்றுசொன்னேன்
கூளிக்கு ரெண்டெழுத் தென்று சொன்னேன்
        முழுபா னைக்கு வாயில் லைஎன்று சொன்னேன் 96

ஆட்டுக்கு ரெண்டு காலென்று சொன்னேன்
        ஆனைக்குப் பானை நிற்குமே
மாட்டுக்கு காலில்லை என்று சொன்னேன்
        கதைவகையைச் சொல்லடிவா லைப்பெண்ணே 97

கோயிலும் மாடு பரிந்தவ னுங்களரி
        கூத்து மேய்க்கத் தெரிந்தவனும்
வாயில் லாக்குதிரை கண்டவனும் மாட்டு
        வகைதெரி யுமோவா லைப்பெண்ணே 98

இத்தனை சாத்திரம் தான்ப டித்தோர்
        செத்தா லென்றதுல கத்தோர்கள்
சிரிப்பார் செத்துப்போய் கூடகலங் கவேண்டும்
        அவள்தே வர்களுட னேசேர வேண்டும் 99

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்
        உண்டோ உலகத்தில் அவை சொன்னால்
அற்றது பொருந்தும் உற்றது சொன்னால்
        அவனே குருவடிவா லைப்பெண்ணே 100

பூரணம் நிற்கும் நிலையறி யான்வெகு
        பொய்சொல்வான் கோடிமந் திரம் சொல்வான்
காரண குரு அவனு மல்லவினை
        காரிய குருபொரு ளறிப்பான். 101

எல்லா மறிந்தவன் என்று சொல்லி
        இந்தபூமி யில்ஏழு ஞானியென்று
உல்லா ஸமாக அவர் பிழைக்க
        இவர்ஓ டிதிரியுற்றார் வாலைப்பெண்ணே 102

ஆதி வாலை பெரிதானா லும் அவள்
        அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ
ஆதி வாலை பெரிதான லும் அவள்
        நாயகன் அல்ல சிவன் பெரிது 103

ஆயசு கொடுப்பாள் நீரழி வுமுதல்
        கண்டது மற்ற வியாதி எல்லாம்
பசாசு பறந்திடும் பில்லிவி னாவடிவத்தில்
        வாலைப்பெண் பேரைச் சொன்னால் 104

நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளந்த
        நேரத்திலும் வாலை முன்னிருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
        காலனை யுந்தா னுதைப்பாள் 105

பல்லா யிரங்கோடி யண்டமுதல்
        பதினான்கு புவனமூர்த் திமுதல்
எல்லாந் தாகுய படைத்தவளாம் வாலை
        எள்ளுக்கு எண்ணெயைப்போல் நின்றவளாம் 106

தேசம் புகழ்ந்திடும் வாலைக் கும்மிதமிழ்
        செய்ய எனக்கு உபதேசம் செய்தாள்
நேசவான் வீரபெரு மான்குரு சாமி
        நின்பாதம் போற்றிக்கொண் டாடுங்கடி 107

ஆறு புடைபுகல் வீடுகடை சூத்திரம்
        அஞ்செழுத்துக் கும்வகை யறிந்தும்
கூறுமுயல்வேர் வேந்திரன் துனாவள்ளல்
        கொத்தவன் வாழ்க்கைக் கொண் டாடுங்கடி 108

ஆடுங்கள் பெண்டு கள்எல் லோரும்
        அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
        பாதத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி 109

சித்தர்கள் வாழி சிவன் வாழி
        முனிதேவர் கள்வா ழிரிஷி வாழி
பக்தர்கள் வாழி பதம்வாழி குருபாரதி
        வாலைப் பெண்வா ழியதே. 110

அண்ணா மலைத் தீபம் காணவேணு மென்று
        அந்தந்த மாந்தர்கள் போவார்கள்
அண்ணா மலைத்தீபம் உன்னுக்குள் ளேஅதை
        அகண்டம் பார்த்து நீ கும்மியடி 111

திருக்க டையூர் மூர்த்தலிங் கேசனா
        தெரிசிக்கப் போகவேணு மென்பார்
திருக்கடை யூரும் மூர்த்தலிங் கேசரும்
        தெரிசித்துக் காணம்நீ கும்மியடி 112

சிதம்பர நடனம் பார்க்க வேணும்
        சீறாக எல்லோரும் போகவேணும்
சிதம்பரத் தாண்டவம் உன்னுக்குள் ளேஅதை
        சேவித்து கும்மியடி யுங்கடி 113

ஒருகாலைத் தூக்கியே உன்னுக் குள்ளே
        வருத்தண்ட தாண்டவம் ஆடுகிறார்
திருப்பாதம் கண்டு சேவித்துக் கொண்டால்
        சிதம்பரம் போவானேன் கும்மியடி. 114

வடமலை என்று சொல்லிஎல் லோரையும்
        வையகத்தில் மாந்தர் போவார்கள்
வடமலையில் வாழும் வெங்கடே சனுக்கு
        வளர்ந்து நிற்குறான் கும்மியடி. 115
-------------

பாடல் முதல் குறிப்பு அகராதி (பாடல் எண்)
அஞ்சிலே மஞ்சிலே 33 அஞ்சு பூதத்தை 62
அஞ்சிலே ரெண்டு 46 அட்டமான வட்டம் 59
அண்ணாமலைத் தீபம் 111 அத்தியிலே நாம் 31
அந்திரி சுந்திரி 6 அயனும் மைந்து 17
அரிக்கு முந்தின 11 அழுத்திலே சொல்லத் 32
அன்னம் பெரிதல்லால் 68 அன்னமிருக்குது 51
ஆசை வலைக்குள் 50 ஆட்டுக்கு ரெண்டு 97
ஆடுங்கள் பெண்டு 109 ஆண்டிப் பெண்ணாம் 5
ஆணும் பெண்ணும் 76 ஆதியல் மஞ்செழுத்த 12
ஆதிவாலை 103 ஆயசு கொடுப்பாள் 104
ஆத்திலே அஞ் 57 ஆலத்திலே இந்த 35
ஆறுபடை புகல் 108
இண்ணைக்கிருப்பதும் 77 இத்தனை சாத்திரம் 99
இந்த விதத்திலே 38 இப்படியல்லோ இவள் 66
இரண்டு காலால் 61 இருந்த மார்கமாய் 43
இனிவெளியினில் 22
உச்சிக்கு நேரே 24 உமையெழுத்தே 13
உற்றது சொன்னால் 100 ஊத்தைச் சடிலமென்று 23
எங்கு நிறைந்தவள் 3 எயக்குது எயக்குது 19
எரியுது அறுவீட்டில் 25 எல்லாமறிந்தவள் 102
ஏழைப்பனாதிகள் 85 ஒருகாலைத் தூக்கியே 114
ஒன்பது வாசல் 37 ஓமென்ற அக்ஷரந் 41
கட்டாத காளையைக் 42 கண்டது கேட்டது 87
கத்தி பெரிதோ 67 கல்வி நிறை வாலைபெண் 1
கற்புள்ள மாதர் 45 காகமிருக்குது 54
காணது கிட்டாது 16 காரியனாகிலும் 91
காலனைக் காலாலுதைத் 63 கும்பிக் குளத்தி 55
கூடிய பொய்கள் 90 கையில்லாக் குட்டையன் 47
கோயிலும் மாடு 98 கோழிக்கு ஆறுகால் 96
சத்தி சடாதரி 2 சாதி பேதம் 94
சாஸ்திரம் பார்த்தாலு 15 சித்தர்கள் வாழி 110
சிதம்பரநடனம் 113 சிதம்பாச் சக்காந் 20
சிரித்து மெல்லப் 65 சிலம்பொலியென்ன 26
சிவனடியாரை 88 சூடாமல் வாலை 29
செகம் படைத்ததும் 14
ஞானப் பெண்ணாமருதின் 4
தஞ்சமென்றோரைக் 86 தன்வீடு இருக்க 83
தாயும் பெண்டாட்டியும் 80 திருக்கடையூர் 112
திருப்பணிகள் முடித்தே 83 தில்லையில் முல்லையில் 7
தேசம் புகழ்ந்திடும் 107 தேறுண்டு அஞ்சாறு 36
தொண்டையுள் முக்கோணம் 49 தொந்தியிலே நடு 34
தோப்பிலே மாங்குயில் 52
நகார திஷ்டிப்பு 39 நந்த வனத்திலே 72
நாட்டத்தைக் கண்டால் 75 நித்திரை தன்னிலும் 115
பண்டு முளைப்பது 70 பண்டுமே அழைக்கின்ற 58
பல்லாயிரங்கோடி 106 பாக்கியமும்மகள் 82
பாலோடுமுண்டு 95 பூத்த மலராலே 44
பூரணம் நிற்கும் 101 பெண்டாட்டி மந்தை 81
பெண்டாட்டியாவதும் 79
மஞ்செழுத்தானதும் 18 மண்ணுமில்லாமலே 71
மனதுறுதியும் 21 மாதா பிதா கூட 8
மாதாவாய் வந்து 64 மாமிஷமானாள் 69
மீனுமிருக்குது 53 முச்சுடரான 28
முக்கோண வட்டக் 60 முட்டை இடும் 58
முந்த ஜெகங்கள் 10 மெத்தை தனிலே 84
மேல்வீடு கண்டவள் 30 மேலுங்கோட்டைக்கு 48
ராஜாக்கள் பகை 92
வகாரமானது 40 வடமலை என்று 115
வடிக் கழிவுகள் 89 வாசிப் பழக்க 27
வாலைக்கு மேலான 74 வாலையைப் பூசிக்க 73
வீணாசைக் கொண்டு 78 வேதமும் பூதமுண்டான 9
-----------
துணை நூற்பட்டியல்
ஞானசௌந்தரி -
கொங்குநாட்டார் வழக்காற்றில் கும்மிப்பாடல்கள்
முனைவர் பட்ட ஆய்வேடு
சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை - 5.
--------

This file was last updated on 22 Jan. 2020.
Feel free to send the corrections to the .